Sunday, May 31, 2009

ராகுல் காந்தி 4

அமைச்சராகப் பொறுப்பேற்றால் கட்சி நாடு
ஆக்கம் பெறும் வேலைகளைச் செய்யொணாது
தமக்கு வேலை மக்களோடு இருத்தல் அவர்
தாழ்ந்திருக்கும் நிலை தன்னை மாற்றல் என்று
பொறுப்போடு சொல்லி நிற்கும் இளையவனை
பொறுமையெனும் பெருமை கொண்ட இனியவனை
விருப்போடு வாழ்த்தி நிற்போம் ராகுல் வாழ்க
வெற்றியெல்லாம் ஏழையரை வந்துசேர்க

Friday, May 29, 2009

ராகுல் காந்தி 3

தந்தையவர் பண்போடும் பதவி வேண்டாத்
தாயவரின் தெளிவோடும் பாட்டியவர்
முந்தி யிந்த நாடாண்ட முறைகள் கண்டும்
மூத்த நேரு தாத்தாவின் நேர்மையோடும்
வந்து நிற்கும் இவ்விளைஞன் தன்னைக் கண்டு
வாயார வாழ்த்துகின்றேன் ராகுல் வாழ்க
சொந்தங்கள் ஏழைகளே என்று அவர்
சுகம் காணப் போராட வந்தாய் வாழ்க

Thursday, May 28, 2009

ராகுல் காந்தி 2

முன் வரிசை தனில் அமரக் கூசுகின்றார்
முறுவலுடன் பின்னாலே அமருகின்றார்
தன் தகுதி பெருமையெல்லாம் உணர்ந்ததனால்
தடுமாற்றம் இல்லாமல் உயருகின்றார்
என் நாடு இந்தியா என்றுணர்ந்து
இளைஞர்களை நாட்டுணர்வால் ஒன்று சேர்த்தார்
கண்ணான கண்மணியாம் ராகுல் காந்தி
கவலைகளைத் தீர்த்திடுவார் நம்பி நிற்போம்

ராகுல் காந்தி

வெள்ளுடை வெள்ளுள்ளம் வெண் சிரிப்பு
விரிவான நற்குணங்கள் பட்டறிவு
கொள்ளை கொள்ளும் அழகு முகம் வஞ்சகத்தின்
கூட்டில்லை என்று எங்கும் காட்டி நிற்கும்
நல்லவனாய் வல்லவனாய் இளைய மகன்
நாடு காக்க வந்துள்ளான் ராகுல் ராகுல்
சொல்கையிலே நாவினிக்க உளம் களிக்க
சொல்லுகின்றோம் இளைய மகன் வாழ்க வாழ்க



பதவிகளைப் பெறுவதற்காய்ப் பல்லிளித்து
பரிதவித்துச் சொல்லிழந்து துடி துடித்துக்
கரவு மனம் தனை மறைத்து நல்லோர் போல
கவிதை சொல்லி ஏமாற்றும் தீயோர் முன்னே
உதவி செய்ய வந்தேன் நான் ஏழைக்காக
உயர் இயக்கம் நாடு காக்க என்றே வந்தேன்
பதவி யெதும் வேண்டாப் பணி செய்ய வந்தேன்
பண்பு நிறை ராகுல் சொன்னார் வாழ்க என்றும்

Monday, May 25, 2009

குரான் கருத்து

வாழ்நாளை நீ வாழ்ந்த வழியைச் சொல்லு
வளம் சேர்த்த வழிகளினைச் சொல்லி நில்லு
சூழ்ந்த செல்வம் செலவான வழியைச் சொல்லு
சுக இளமைக் காலத்தின் வாழ்வைச் சொல்லு
தேர்வான உன் அறிவால் மனித வாழ்வில்
தேர்ந்தெடுத்து நீ செய்த செயல்கள் சொல்லு
ஒர்ந்து இதனைச் சொல்லாமல் இறைவன் அவன்
உயர் நீதி மன்றம் விட்டு விலகொணாது

வடிக்கின்றார் காண்

நடிக்கின்றார் நடிக்கின்றார் நாணமின்றி
நாள்தோறும் நாள்தோறும் நடிக்கின்றார் காண்
துடிக்கின்றார் துடிக்கின்றார் துடிக்கின்றார் காண்
தொகை வகையாய்த் தன் குடும்பம் வாழ்வதற்கு
பிடிக்கின்றார் பிடிக்கின்றார் பிடிக்கின்றார் காண்
பெற அரிய பதவிகளைப் பிடிக்கின்றார் காண்
வடிக்கின்றார் வடிக்கின்றார் வடிக்கின்றார் காண்
வறியவர்கள் கண்ணீரை வடிக்கின்றார் காண்

Sunday, May 24, 2009

தந்தை தாயோடும் அவர்கள் உடன் பிறந்தவர்களோடும்

கவியாக்கிய தாயோடு

Saturday, May 23, 2009

தமிழாக்கிய தந்தையும் கவியாக்கிய தாயும்

Friday, May 22, 2009

வேடம் என்று

தமிழுக்காய் உயிர் கொடுப்பேன் என்று சிலர்
தம்பட்டம் அடிக்கின்றார் பல நாட்களாய்
உமிழ் நீரைக் கூட இவர் பிறருக் கென்று
உதவிடவே மாட்டார்கள் பேச்சு பேச்சு
கமழ் தமிழைக் காப்பாற்ற இவரையன்றி
கனித் தமிழர் யாரும் இல்லை என்றும் சொல்வார்
தமிழுக்கு இவர் தம்மைத் தெரியும் இவர்
தமைக் காக்கப் போடுகின்ற வேடம் என்று

Thursday, May 21, 2009

யார் வீரர் நபி பெருமானார்

யார் வீரன் என்பதற்கு நபி பெருமான்
இயம்பி நின்ற நல்லுரையைக் கேட்டீர் என்றால்
நாம் வீரன் ஆவதற்கு ஏற்ற தொரு
நல் வாய்ப்பைப் பெற்றிடுவீர் ஆமாம் ஆமாம்
போர் முனையில் எதிரிதன்னை வீழ்த்துவது
போற்றுகின்ற வீரமென ஆவதில்லை
ஆம் கெட்ட கோபமதை விட்டு விட்டு
ஆளாகி நிற்பாரே அவரே வீரர்

குறட் கருத்து

பாவங்கள் செய்பவரைப் பாவி என்று
பகர்வதுவே உலகத்தார் பழக்கம் இங்கே
பாவி என்று அழுக்காற்றைப் பகருகின்றார்
பல தெளிவும் உயர் அறிவும் தந்த தந்தை
கூவத்தைப் போல் மனது கொண்டு வாழும்
கூட்டத்தின் பொறாமையினைப் பார்க்கும் போது
ஆபத்தை நமக்குணர்த்த வள்ளுவனார்
அருளிட்ட அக்குறளே நினைவில் வரும்




திருக்குறள்

அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்று
தீயுழி உய்த்து விடும்

குறட் கருத்து

தவநெறியாய் வாழுகின்றார் தம்மைவிடத்
தனி மனிதன் உயர்ந்தவனாய் நிற்பான் என்று
புவனம் எல்லாம் வாழ்வதற்கு வழிகள் சொன்ன
பொது மறையில் வள்ளுவனார் சொல்லுகின்றார்
அவர் உடம்பை வருத்தி உண்ணா நோன்பதனை
அடிக்கடியே மேற் கொள்ளும் அவரை விட
பிறர் சொல்லும் இனிமையற்ற சொற்கள் தன்னை
பெரிதாக்கார் தன் பின்தான் துறவி யென்றார்



பசி தாங்கி பல விதத்தில் தவங்கள் செய்யும்
பரம் தேடி நின்றிருக்கும் தவ நெறியார்
கசிகின்ற காதலிலே கடவுளையே
காலமெல்லாம் நினைக்கின்ற மிகப் பெரியார்
பசி தீர்த்து மற்றவரின் துன்பம் தீர்த்து
பண்பதுவே பசி தீர்த்தல் என்று வாழும்
இசை வாழ்வாய் தன் வாழ்வை மாற்றிக் கொண்ட
எளியார் பின் துறவியரை வைப்பேன் என்றார்


திருக்குறள்

உண்ணாது நோற்பர் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நிற்பாரின் பின்


ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

Wednesday, May 20, 2009

சுகம் அவர்க்கு

புரிகின்றார் புரிகின்றார் புரிய மாட்டார்
புரியாமல் போகின்றார் தெரிந்து கொண்டே
அறிகின்றார் அறிகின்றார் அறிய மாட்டார்
அறியாமல் போகின்றார் அறிந்து கொண்டே
சொரிகின்றார் அன்பதனை அறிந்து கொண்டார்
சொல்லுகின்றார் தம் அன்பை நல் மொழியில்
சொறிகின்றார் ஆறாத புண்ணைக் கொண்டோர்
சொறிவதிலே சொறிவதிலே சுகம் அவர்க்கு

Tuesday, May 19, 2009

அனைவருமே ஊமையானார்

இறந்தவர்க்காய் அழுவதுவும் அவருக்காக
இருப்பதுவே தான் என்று புலம்புவதும்
நிரந்தரமாய்த் தமிழர்களின் நடிப்பு இதை
நினையாமல் அனைவரையும் போற்றி நின்றோர்
உளம் துடிக்க இன்று அதைப் புரிந்து கொண்டு
உணர்வாலே துடிக்கின்றார் அய்யோ அய்யோ
களம் காணா வீரர்களைப் போலிகளை
கண்ட பின்னர் அழுகின்றார் என்ன செய்ய


ஊராரின் பிள்ளைகளைத் தீயிலிட்டு
உணர்ச்சி பொங்க அது குறித்து உரை நிகழ்த்தி
சீராய்த் தன் பிள்ளைகளை பத்திரமாய்ச்
சீமானின் பிள்ளைகளாய் வளர்த்திடுவார்
ஆரேனும் தன் பிள்ளை தமிழுக்காக
அழிவதற்காய்க் கொடுத்தாரா இல்லை இல்லை
ஊராரே நீண்ட நாள் நாடகங்கள்
உணர்ந்தார்கள் அனைவருமே ஊமையானார்

Tuesday, May 12, 2009

மறக்க வேண்டாம்

யார் யாருக்கு ஆதரவு புரியவில்லை
யாரோடு யார் இருப்பார் தெரியவில்லை
ஊர் முழுக்கச் சத்தமிட்டு சுற்றி வந்தார்
ஒய்வெடுக்க மாட்டாமல் திணருகின்றார்
சீர் கெடுத்தார் யாரென்று தெரியாராகி
சிந்திக்க முடியாமல் மக்கள் நின்றார்
கார் தந்து வான்மழையைத் தரும் இறையே
காப்பாற்றல் உன் கடமை மறக்க வேண்டாம்

வாழ்வதனால் பதினெண் கீழ்க் கணக்கு கணிமேதாவியார்

எண்ணஞ் சிறியாராய் இருப்பாரை நெருங்காமல்
புண்ணென்னும் உணர்வோடு புலால் தன்னை உண்ணாமல்
வண்ணப் பொய்களையே வாழ்க்கையிலே கொள்ளாமல்
வடிவாக அடுத்தவரின் பொருள்களையே திருடாமல்
எண்ணமெல்லாம் அடுத்தவர்க்கு ஈவதென்று பெருமை கொண்டு
இதயத்தைக் கல்லாக இறுக்காமல் வாழ்பவர்க்கு
பன்னரும் அற நூல்கள் பைந்தமிழில் உள்ளதெல்லாம்
பயனாக ஆகாது அற வாழ்க்கை வாழ்வதனால்


ஏலாதி


குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால் பொய்
மறுகான் பிறர் பொருள் வெளவான் - இறுகானாய்
ஈடுஅற் றவர்க்குஈவா னாயின் நெறிநூல்கள்
பாடிறப்ப பன்னும் இடத்து

Monday, May 11, 2009

போற்றி நிற்கும்

நாள் தோறும் அனைவரிடம் அன்பு செய்யும்
நல்லுறவைத் தந்திட்ட தமிழர் நாட்டில்
பாழ் செய்யும் பழக்கத்தைப் பாவியர்கள்
பரப்புகின்றார் அந்தோ நாம் என்ன செய்ய
தோள் தழுவிக் கருவுற்று பெற்ற அன்னை
தோகைக்கு ஒரு நாளாம் தந்தையர்க்கோ
நாள் என்று ஒன்று உண்டாம் காதலர்க்கும்
நாளொன்றாம் வெவ்வேறாயச் சொல்லுகின்றார்


பாழ்பட்டீர் வெளி நாட்டான் வழக்கையெல்லாம்
பைந்தமிழர் நாட்டினுள்ளே கொண்டு வந்தீர்
சூழ்ந்து நிற்கும் நல்லன்பும் நல்ல பண்பும்
சொத்தாகக் கொண்டீரே என்ன கூத்து
வாழ்நாளில் எந்நாளும் அனைவருக்காய்
வழங்குதற்குச் சொல்லி நின்ற வள்ளுவரின்
ஆழ் மனத்துப் பேரழகே என்றும் எங்கும்
அய்யா நம் பெருமையினைப் போற்றி நிற்கும்

தமிழராவார் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் ஏலாதி பழம் பாடல் புதுக் கவிதை

எளிது எது அரிது எது என்பதனை
ஏலாதி சொல்லுகின்றார் வெண்பா ஒன்றில்
எளிது உடன் சாவதனைத் தேடி விடல்
இருந்து நல்ல கல்வி வழி ஒழுக்கத்தோடு
பொருந்தும் நல்ல வாழ்க்கையதை வாழ்ந்துவிடல்
புகழதனைத் தரும் ஆனால் அது அரிது
இருந்து மண வாழ்க்கையினை அடைந்து விடல்
எல்லார்க்கும் மிக எளிது ஆனால் அந்த


பொருந்தும் மண வாழ்க்கையினைச் சிறந்ததாக்கி
பொறுப்போடு பற்றற்று ஒழுக்கமாக்கி
சிறந்த ஒரு வாழ்க்கையினைச் செப்பமாக்கல்
சிந்தித்தால் மிக மிகவே அரிது ஆகும்
துறந்து விட்டேன் என்று சொல்லி துறவியாதல்
தொல்லுலகில் யாவர்க்கும் எளிது ஆகும்
நிறைந்து அதில் நிற்பதுவும் புலன்கள் தன்னை
நீத்து அதில் வெல்வதுவும் அரிது ஆகும்


திறந்து விட்ட வாய் வழியாய்ப் பலவிதமாய்த்
தேராமல் பல சொல்லல் எளிது ஆகும்
உணர்ந்து அவை அனைத்தையுமே செயலாய் ஆக்கல்
உம்மாலே முடியுமோ அரிதரிது
சிறந்த இந்தச் சேதியில்லாம் ஏலாதியில்
செப்புகின்றார் கணி மேதை எனும் புலவர்
அற நூலாம் இதைத் தமிழர் கற்று விட்டால்
அதன் பின்னர் அவரேதான் தமிழராவார்


ஏலாதி

சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிது அரிது மெய் போற்றல் - ஆவதன் கண்
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியராய்
வேறல் எளிது அரிது சொல்

Sunday, May 10, 2009

சேர்ப்பது எதற்கு

வங்கிகள் தோறும் பணத்தைச் சேர்த்து
வடிவாய் நிறைய வீடுகள் வாங்கி
தங்களுக்கென்று பல விதமாக
தனித் தனியாக பலவும் சேர்த்து
எங்கு பார்த்தாலும் கடவுள் என்று
இயம்பி நிற்பாரை ஒன்று கேட்பேன்
அங்கவன் தன்னை நம்புவதென்றால்
அடுக் கடுகாகச் சேர்ப்பது எதற்கு

வீரர் இல்லை

கொல்லப்படுவோம் என்று உணர்ந்தும்
கொஞ்சம் கூட அஞ்சா வீரர்
வெல்லல் என்பது அன்பால் என்று
வீரம் அதனைக் காத்தும் நின்றோர்
கல்லாய் இன்றிக் கனியாய் இருந்த
காந்தி எனும் அந்த வீர மகன்தான்
எல்லாருக்கும் தந்தை ஆனால்
எவரும் இங்கே வீரர் இல்லை

Saturday, May 9, 2009

வாக்கைப்போடும்

ஒரு பாடு சின்னங்கள் உண்டு இங்கே
உண்மைக்கு ஒரு சின்னம் எங்கும் இல்லை
தறி பாடு படுகின்றார் ஏழை மக்கள்
தவிக்கின்ற வாய்க்கங்கு தண்ணீரின்றி
கருவாடாய்க் குடல் மாறக் கலங்குகின்றார்
கஞ்சிக்கு வழியில்லை வாக்கு உண்டு
தெருவோடு வருகின்றார் தேர்தல் தோறும்
திரும்பி எல்லாம் வர மாட்டார் வாக்கைப் போடும்

அறிவீர் நீரே

கும்பிட்டு விழுகின்றார் அனைவரையும்
கூப்பிட்டுக் கூப்பிட்டு வணங்குகின்றார்
எம்புட்டு வேணுமோ துட்டுத் தர
ஏற்பாடு உள்ளததைச் சொல்லுகின்றார்
நம்பிட்டு வாக்குக்களை அளிக்கச் சொல்லி
நாய் போல அலைகின்றார் வெயிலில் இங்கு
அம்புட்டுத்தான் தேர்தல் முடிஞ்ச பின்னே
அவர் யாரோ நாம் யாரோ அறிவீர் நீரே

Thursday, May 7, 2009

வாழ்வைக் கொல்ல

யாருக்கும் வெட்கமில்லை என் றுரைத்தார்
எழிற் கவியாம் பாரதியின் தாசனாரும்
ஊருக்கு ஊர் இன்று வெட்கமில்லார்
ஊர்வலங்கள் வருகின்றார் தலைவராகி
நீருக்குள் இருக்கின்ற முதலை கூட
நீங்களாக மாட்டினால் தான் உம்மைக் கொல்லும்
ஊருக்குள் வருகின்றார் உம்மைக் கொல்ல
உண்மை கொல்ல எதிர் கால வாழ்வைக் கொல்ல

வீரர் இல்லை

காந்தி எனும் மாமனிதர் அகிம்சை என்னும்
கனவதனை மெய்யாக்கி வென்ற வீரர்
ஏந்தி நின்ற பதவிக்கு ஏற்றம் தந்து
ஏழையென வாழ்ந்த காமராசர் வீரர்
சேர்ந்து நிற்கும் வறுமை ஒன்றே துணையாய்க் கொண்டு
சீராக வாழ்ந்து வென்ற கக்கன் வீரர்
ஆழ்ந்திதனை உணர்ந்தவர்கள் அறிவார் இங்கு
அவருக்குப் பின்னாலே வீரர் இல்லை

என்றும் வாழ்வார்

மாசில்லா மனத்தோடு வாழ்ந்தாரென்றால்
மறந்தும் அங்கே பொய்யில்லை புரட்டும் இல்லை
தூசு கொண்ட மனத்தோடு வாழ்ந்தாரென்றால்
துன்பம் தரும் பொய் புரட்டே அவரின் எல்லை
காசு மட்டும் வாழ்க்கை என்று வாழ்வாரெல்லாம்
கயமை பொய்மை புன்மை என்றே வாழ்ந்திடுவார்
தேசு புகழ் கொள்வார்கள் எல்லாம் உண்மைத்
தெய்வம் அதை உணர்ந்தாராய் என்றும் வாழ்வார்

Wednesday, May 6, 2009

தமிழ்க்காதல் கொண்ட என் பேரன் திரிபுரசுந்தரத்தோடு

சிங்கப்பூர்த் தமிழ்ச்சங்கத்தில் தலைவர் கிருஷ்ணசாமியோடு

ஆனந்த பவனம் உணவகத்தில் நண்பர்களோடு

இளைய தலைமுறை

ஆர்வலர்கள்

கையெழுத்து வாங்குகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்

புகழேந்தி அன்பழகன் இராமசாமியோடு

நண்பர் புகழேந்தியோடு

சுவைஞர்கள்

அன்பே வடிவான நண்பர் புகழேந்தியும் தலைவர் இராமசாமியும்

என்னைப் பார்த்துக் கொள்ள என்றே இவர் வந்தாரோ என்று என்னைக் கவனித்துக் கொண்ட அன்புத்தம்பி சண்முகசுந்தரம் பட்டுக்கோட்டையாரின் அண்ணன் மகன்

சுவைஞர்க்கள் கவிஞர் அமலதாசன்

கழனிக் கவி மலரை நான் வெளியிட பண்பின் உருவமான தொழிலதிபர் ஜலீல் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்

அவையை வணங்கி நிற்கின்றேன உடன் கழனிக் கவிமலர் ஆசிரியர் இராமசாமி அன்பழகன் புகழேந்தி்

அமைச்சர் விழா சிறக்க உதவிய தொழிலதிபர் ஜலீல் பாஸ்கர் அவர்களோடு

சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூரில் கலை வளர்க்கும் பாஸ்கரன் அவர்களுடன்

மக்கள் கவிஞர் மன்ற மேதின விழா மேடை சிங்கப்பூர் பெருமாள் கோயில் வளாகம்

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தலைவர் இராமசாமியும் தம்பி பாலுவும்

உணர்வீர் நீரே

உண்மையினை யாரேனும் பேசி விட்டால்
உடனேயே பதறுகின்றார் அய்யோ என்று
நன்மை அது என்பதனால் நடுங்குகின்றார்
நலம் எண்ணார் உடனேயே கலங்குகின்றார்
எண்ணமெல்லாம் நல்லனவே என்று வாழ்வோர்
இதயத்தால் வாழ்த்துகின்றார் மகிழுகின்றார்
உண்மை அது ஒன்றேதான் என்றும் எங்கும்
உலகத்தை வெற்றி கொள்ளும் உணர்வீர் நீரே

மகிழ்வே என்றும்

வாழ்வதற்குப் பணம் தேவை என்றல் விட்டு
வாழ்க்கை அதே பணத்திற்கு என்று வாழும்
கோழைகளின் வாழ்வினிலே இன்பம் இல்லை
குறள் இல்லை தமிழ் இல்லை எதுவும் இல்லை
நாளையல்ல இன்று கூட சொந்தம் இல்லை
நாயகனின் கையில் என்று இனிய தமிழ்
வேளை தோறும் சொல்கிறது புரிந்து கொண்டால்
வேதனைகள் சேராது மகிழ்வே என்றும்

Tuesday, May 5, 2009

என்னுடனே

மக்கள் கவிஞருக்காய் மாபெரிய விழா எடுத்தார்
மனம் விரும்பி எனை அழைத்தார் சிங்கப்பூர் வாழ் தமிழர்
தக்கவனைப் பேசுதற்காய் தமிழோடு சென்றேன் நான்
தழுவி எனை மகிழ வைத்தார் மன்றத்தின் அன்பரெலாம்
பக்கம் இருந் தென்னைப் பாராட்டிச் சீராட்டி
பண்பு நலம் காத்தார்கள் அனைவருமே என்ன சொல்வேன்
தக்க இராமசாமியுடன் தனி அன்புப் புகழேந்தி
தாவி வரும் சிரிப்பழகு முத்துவுடன் காசி யவர்


எக்கணமும் எனக்காக ஒடிவரும் சண்முகமும்
இனிமை நிறை வெங்கடேஷ் எனும் அன்புத் தம்பியுடன்
தக்கவராய் அன்பு செய்யும் கபிலருடன் ராஜாராம்
தமிழ் மறையார் ஒட்டுநரின் தடாலடி அன்பு அதும்
மிக்கவராய் தமிழ் வளர்க்கும் உறரி கிருஷ்ணப் பெரியோரும்
மேன்மை மிகு தைப்பூச அன்பழகன் கடிகாரம்
இக்கணமும் எக்கணமும் என்றென்றும் மறவேன் நான்
இதயத்தில் இருக்கின்றார் அனைவருமே என்னுடனே